புதுச்சேரி காலாபட்டு சிறையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 200 க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக் கூறியும், பரோல் விண்ணப்பித்தாலும் அது குறித்து பரிசீலனை செய்வதில்லை என குற்றம்சாட்டியும் 24 தண்டனை கைதிகள் நேற்று இரவு உணவு உண்ண மறுத்தனர்.
இதனையடுத்து அதிகாரிகள் கைதிகளை சமாதனம் செய்தும் கைதிகள் கேட்காமல் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.