சீர்காழி: நீதிமன்றம் அழைத்துச் செல்லும் போது போலீஸ் பிடியிலிருந்து கைதி தப்பி ஓட்டம்!
வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி காவல் நீட்டிப்புக்காக சீர்காழி நீதிமன்றம் அழைத்து வந்த போது போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக காரைக்கால் நெடுங்காடு, மேலகாசாகுடியை சேர்ந்த தீபக் ஜங்லின் 27 என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி நாகை சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் காவலர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் நாகை சிறைச்சாலையிலிருந்து தீபக் ஜங்லினை சீர்காழி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். நீதிமன்றத்திற்குள் செல்லும்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் பிடியில் இருந்து தீபக் ஜங்லின் தப்பி ஓடியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தப்பியோடிய தீபக் ஜங்லினை சீர்காழி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதி தப்பி ஓடியது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் இடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.