பிரதமரை முகநூலில் விமர்சித்த தமிழக இளைஞர் கைது
பிரதமர் நரேந்திர மோடியை முகநூலில் விமர்சித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரரில், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மகன் திருமுருகன் தனது முகநூலில் பிரதமர் மோடியை தொடர்ந்து தவறாக விமர்ச்சித்தும், அவதூறாகப் பேசி வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர். மேலும் திருமுருகன் இத்தகைய செயலில் தொடர்ந்து ஈடுபடவேண்டாம் என பலமுறை எச்சரித்தும் அவர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதை நிறுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமுருகனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சமூக வலைத்தளங்களில் பிரதமர், ஜனாதிபதி போன்ற நாட்டின் தலைவர்களை அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.