கோழிப்பண்ணை கோழிகளுக்கு தீவணமளிக்க 5,750 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய உரிமையாளர் கைது
செங்கல்பட்டில் கோழிப்பண்ணையில் கோழி தீவனத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,750 கிலோ ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியையடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையொன்று உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, அதை கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்துவது குறித்து காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் சில தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி: ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி உறுதி
இந்த தகவலின் அடிப்படையில் ஏடிஜிபி பாஸ் குமார் உத்தரவின்பேரில் அங்கு சென்ற குற்றப்புலனாய்வு போலீசார் கோழி பண்ணையில் சோதனை செய்ததில் கோழி தீவனத்திற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,750 கிலோ, அதாவது 50 கிலோ எடை கொண்ட 115 மூட்டைகள் அரிசை பறிமுதல் செய்தனர். பதுக்கி வைத்திருந்ததாக மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் தேடி வருகின்றனர்.