\
Post-mortem reveals shocking details in Karnataka encounter of 3 Tamils
Model imagechat gpt

கர்நாடகா | 3 தமிழர்கள் என்கவுன்டர்.. பிரேதப் பரிசோதனையில் பகீர் தகவல்!

கர்நாடக வனப்பகுதியில் மானை வேட்டையாட வந்ததாக கூறி வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Published on

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் ஹானூர் தாலுகாவில் மரியமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊர் காவிரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சிலர் காட்டுக்குள் மானை வேட்டையாடச் சென்றதாகக் கூறி, ஆகஸ்ட் 15ஆம் தேதி கர்நாடக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில், அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், செபாஸ்டின் டேவிட் குமார், ஆகிய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மகிமைதாஸ் என்பவர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக வனத்துறை அளித்த விளக்கத்தில், காவிரி சரணாலய வனப்பகுதியில் மானை வேட்டையாட சிலர் வந்ததாக தகவல் கிடைத்ததன் பேரில், வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

dk shivakumar
dk shivakumarPTI

அப்போது அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், இதில் வனத்துறை ஊழியர் ஒருவர் காயமடைந்ததால் வனத்துறையினர் திருப்பிச் சுட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களிடமிருந்து மான் இறைச்சியும், மூன்று நாட்டுத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற தகவலும் வெளியானதுதான். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு, வனத்துறையினர் சுட்டுக்கொன்றுவிட்டு, மான் வேட்டையாட வந்ததாகப் பொய்யான காரணம் கூறுவதாகக் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் விஜயும், கர்நாடக வனத்துறையின் விளக்கம் ஏற்புடையதல்ல எனக் கூறி, இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “இது எங்கள் பிரச்னை. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்; எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கர்நாடக விவகாரங்களில் தமிழ்நாடு தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் வலுத்து வருவதுடன், வனத்துறை பொய்யான ஆதாரங்களைக் காண்பிக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

CM Vijay
CM VijayPTI

மைசூர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரேதப் பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மூவரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தற்காப்புக்காக சுடப்பட்டதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், செபாஸ்டியன் டேவிட் குமார் உடலில் இடது மார்புப் பகுதியில் (8.5 சென்டிமீட்டர் × 6 சென்டிமீட்டர் அளவில்) மற்றும் வலது தொடையில் (13 சென்டிமீட்டர் × 8 சென்டிமீட்டர் அளவில்) ஷாட்கன்னால் மிக அருகாமையில் (Close range) சுடப்பட்டதால் ஏற்பட்ட இரண்டு ஆழமான காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், அந்தோணிசாமியின் வலது நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஷாட்கன்னால் மிக அருகாமையில் சுடப்பட்டதால் ஏற்பட்ட காயங்களும், அதனைச் சுற்றிலும் சிறு சிறு குண்டுக் காயங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பிரேதப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி, அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன. இந்த என்கவுன்டர் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணைக்குப் பிறகே முழுமையான உண்மை தெரியவரும்.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com