கேரள மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்த சினேகாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. டிஸ்சார்ஜ் ஆக கூறப்பட்ட நிலையில் குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க நேரிட்டது. இந்த சூழலில் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு செவிலியர் உடையில் வந்த பெண் சினேகாவிற்கு ஊசி செலுத்த வேண்டும் என கூறி உள்ளார். ஆனால் தாங்கள் ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஊசி எதற்கு என சினேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் பதில் ஏதும் தெரிவிக்காத அந்த பெண் அவர்களது பேச்சினை கேட்காமல் வலுக்கட்டாயமாக ஊசி செலுத்த முயன்றுள்ளார். அப்போது அது காலி ஊசி என்பதை கண்டறிந்த சினேகா கூச்சலிட்டுள்ளார். உடனே அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் காயங்குளத்தைச் சேர்ந்த அனுஷா என்பதும், அவர் சினேகாவின் கணவருடைய தோழி என்பதும் தெரியவந்தது. கல்லூரி காலம் முதலே இருவரும் நெருங்கி பழகி வந்த சூழலில், அவருக்கு சினேகாவுடன் திருமணம் நடந்ததால் பிரிவை ஏற்க முடியாத அனுஷா, காலி ஊசி செலுத்தி கொலை செய்ய முயன்றது விசாரணையில் அம்பலமானது.
மருந்து கடையில் பணியாற்றி அனுபவம் பெற்று அனுஷா, நரம்பில் காலி ஊசி செலுத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கக் கூடும் என்பதை அறிந்தே இச்செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனுஷாவை கைது செய்த காவல்துறையினர், இது சினேகாவின் கணவருக்கு தெரிந்துதான் நடந்ததா? திருமணத்தை மீறிய உறவின் காரணமாக அவர் கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது காதல் பிரிவை தாங்க முடியாமல் தன்னிச்சையாக ஈடுபட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.