பொள்ளாச்சி: சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையைச் சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் கோமங்கலம் புதூரைச் சேர்ந்த மாரிமுத்து - ஜோதிமணி தம்பதியரின் 26 வயது மகன் ஆனந்தகுமார் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்தோடு கடந்த 13.6.2021 அன்று திருமணம் நடந்தது.
இந்நிலையில் தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று கோவை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். இதனை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோமங்கலம் புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களை கோமங்கலம் போலீசார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
மேலும் ஆனந்த்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.