லத்தியால் மண்டையை உடைத்த போலீசார்: சிசிடிவியில் பதிவான காட்சிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை காவல்துறை உதவியாளர் லத்தியால் தாக்கியதில் மண்டை உடைந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
செருகோல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், கல்லுப்பாலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த திருவட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் அவ்வழியாக வந்த ராஜேஷின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அந்த இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் தேவராஜ், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ராஜேஷை லத்தியால் தாக்கியுள்ளார்.
அதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை உதவி ஆய்வாளர் தரக்குறைவாக பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
அதன் பின்பு பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளான ராஜேஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ராஜேஷை காவலர் லத்தியால் தாக்கும் வீடியோ காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.