வேலியே பயிரை மேய்ந்த கதை... காவலருக்கு வலைவீச்சு
ராமேஸ்வரத்தில் சக காவலரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக, ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமேஸ்வரம் நகர காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தவர் சரவணன். இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரின் குடும்பமும் வசித்து வந்தது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளரின் வீட்டில் யாரும் இல்லாதபோது, உள்ளே நுழைந்த காவலர் சரவணன், அவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்தபோது அங்கிருந்து தப்பியோடியுள்ளார் காவலர் சரவணன்.
ராமநாதபுரம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா முன்னிலையில் நடந்த விசாரணையை அடுத்து, காவலர் சரவணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி தமது வீட்டிற்குள் காவலர் சரவணன் மீண்டும் நுழைய முயன்றதாக உதவி ஆய்வாளரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் காவலர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது தலைமறைவாகியுள்ள காவலர் சரவணனை ராமேஸ்வரம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.