பெட்டிக்கடைகளில் சில்லறை விற்பனையில் குட்கா! கடத்தல்காரர்களை கையும் களவுமாக பிடித்த போலீஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரில் மூட்டை மூட்டையாக கடத்திக் கொண்டு வரப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தனிப்படை போலீசார் இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது நைனார்பாளையம் அருகில் வந்த காரை சோதனை செய்ததில் அதில் 11 வெள்ளை சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக காரை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் கூளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரையும், இவருடன் வந்த தண்டபாணி என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பல்வேறு பெட்டிக் கடைகளில் விற்பனை செய்ய வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.
பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை இவர்கள் பல கடைகளுக்கு சில்லறை வியாபாரமாக விற்பனை செய்து வந்தது மேலும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தினாலோ விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் நடுரோட்டில் பைக் சாகசம்... கண்டுகொள்ளுமா காவல்துறை?