‘பில்லி, சூனியம் இருக்கு’- பரிகார பூஜை எனக்கூறி வயதான பெண்ணுக்கு நடந்த பரிதாபம்

‘பில்லி, சூனியம் இருக்கு’- பரிகார பூஜை எனக்கூறி வயதான பெண்ணுக்கு நடந்த பரிதாபம்
‘பில்லி, சூனியம் இருக்கு’- பரிகார பூஜை எனக்கூறி வயதான பெண்ணுக்கு நடந்த பரிதாபம்
சேலத்தில் பரிகார பூஜை செய்வதாகக் கூறி வயதான பெண்ணிடம் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் லைன்மேடு பென்ஷன் லைன் 2வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர்கான். பாத்திரக்கடை தொழிலாளி. இவருடைய மனைவி ஜான்பேகம்(65). அக்பர்கான் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஜான்பேகம் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் ’உங்கள் வீட்டில் கஷ்டங்கள், பிரச்னைகள், தோஷங்கள், பில்லி, சூனியம் பிரச்னைகள் சூழ்ந்து இருப்பதாகவும், அவற்றை சிறப்பு பரிகார பூஜைகள் செய்து விரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதனால் பணம், வருமானம் பெருகி லாபமடைவீர்கள், உங்கள் குடும்பம் மிகுந்த சந்தோஷமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பூஜை செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இறந்துவிடுவீர்கள் என்று தனியாக இருந்த ஜான்பேகத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ஜான்பேகம் அந்த மர்மநபரை வீட்டிற்குள் வரவழைத்து பரிகார பூஜைகள் செய்யுமாறு கூறி உள்ளார். இதையடுத்து அந்த நபர் பரிகார பூஜைகள் செய்வதற்காக வீட்டில் இருக்கும் நகைகளை கொண்டு வந்து தரும்படி கேட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து மந்திரவாதி எடுத்துவந்த சிறிய மண்சட்டியில் மூதாட்டி அணிந்திருந்த நகையை பூர்த்தி செய்ய போடுமாறு கூறியுள்ளார். இதனை நம்பி ¾ பவுன் தோடு, 1 மோதிரம் ஆகியவற்றை எடுத்து மண்சட்டியில் போட்டுள்ளார். பின்னர் மூதாட்டி திரும்பும் நேரத்தில் மண்சட்டியை மந்திரவாதி கைப்பைக்குள் வைத்துக்கொண்டு, மற்றொரு மண்சட்டியை எடுத்துக் கொடுத்துள்ளார். இதை இப்போது பிரிக்கக்கூடாது குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவர் முன்னிலையில் பிரித்துப் பார்த்தால் பிரச்னைகள் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர் மண் சட்டியை பிரித்து பார்த்தபோது நகையை மர்மநபர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது கணவரிடம் கூறிய மூதாட்டி தன்னை மந்திரவாதி ஏமாற்றி நகைகளை திருடிச்சென்றுவிட்டார் என அழுது புலம்பி உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் நகையை திருடிச்சென்ற போலி மந்திரவாதி மீது மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com