பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் புகார் - உதவி ஆணையர் மீது நடவடிக்கை பாயுமா?
நீட் தேர்விற்கு எதிராக கோவையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது பெண் காவலரிடம் உதவி ஆணையர் தவறாக நடந்துக்கொண்டதாக வீடியோ வெளியானது தொடர்பாக விசாரணை அறிக்கை டி.ஜி.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நஞ்சப்பா சாலையில் கடந்த 4ம் தேதி மாணவர்கள் ஆர்பாட்டத்தின் போது பெண் உதவி ஆய்வாளரிடம் கோவை மாநகர மத்திய உதவி ஆணையர் ஜெயராம் பாலியல் ரீதியான சீண்டல்கள் செய்தது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. பணி இடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சம்மந்தப்பட்ட அதிகாரி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக மாநகர காவல்துறை சட்டம்&ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த விசாரணை அறிக்கையை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளார். பாலியல் அத்துமீறலில் தாம் ஈடுபடவில்லை என்று உதவி ஆணையர் ஜெயராம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், உதவி ஆணையர் ஜெயராமனை பணியிட மாறுதல் செய்ய பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.