\
வீட்டின் மேற்கூரை வழியே இறங்கி விவசாயி வெட்டிக்கொலை - மர்ம நபர்களை தேடும் போலீசார்

வீட்டின் மேற்கூரை வழியே இறங்கி விவசாயி வெட்டிக்கொலை - மர்ம நபர்களை தேடும் போலீசார்

வீட்டின் மேற்கூரை வழியே இறங்கி விவசாயி வெட்டிக்கொலை - மர்ம நபர்களை தேடும் போலீசார்
Published on: 

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போல்நாயக்கன்வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துச்சாமி. இவருக்கு துரைக்கன்னு என்ற மனைவியும், முத்துலட்சுமி, விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி என்ற மூன்று மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இவருடைய மனைவியும் இறந்துவிட்டதால் இவர் தற்போது அவரது தோட்டத்தில் இருக்கும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரையைப் பிரித்து வீட்டின் உள்ளே வந்த மர்ம நபர்கள் உறங்கிக் கொண்டிருந்த முத்துச்சாமியை வெட்டிக் கொலைசெய்து விட்டு தப்பியோடி விட்டனர்.

காலையில் வழக்கம்போல் தோட்டத்து வேலைக்கு வந்த பெண் ஒருவர் முத்துச்சாமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக்கண்டு தகவல் கொடுத்ததின் பேரில் அம்பிளிக்கை போலீசார் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த 18 பவுன் தங்க நகை மற்றும் 51 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போகாமல் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலம் தடயங்களை சேகரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com