”நாங்கள் என்ஐஏ அதிகாரிகள், உங்கள் வீட்டில் சோதனை நடத்தணும்” - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை பிராட்வேயில் என்ஐஏ அதிகாரிகள் எனக் கூறி 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பிராட்வேயில் உள்ள மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஜமால். இவர் சென்னை பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை மலையப்பன் தெருவில் உள்ள ஜமாலின் வீட்டிற்கு நான்கு பேர் கொண்ட கும்பல், தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்றும், உங்களது வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த 10 லட்ச ரூபாய் பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல் கடையிலும் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறி கடையில் இருந்த 10 லட்ச ரூபாயும் பறித்துச்சென்றதாகக் கூறப்படுகிறது.
சந்தேகம் அடைந்த அப்துல் ஜமால் விசாரித்ததில் வந்த நபர்கள் என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்துல் ஜமால் சென்னை முத்தியால் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக முத்தயால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்துல் ஜமாலின் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களைக்கொண்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் அதிகாரிகள்போல் ஏமாற்றி வந்தவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளனர். மேலும் அப்துல் ஜமாலின் வீட்டில் கொள்ளையடித்த நபர்கள் யார் என்பதும், அப்துல் ஜமாலின் தெரிந்த நபர்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு 20 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.