போதை மறுவாழ்வு மையத்தில் மரணமடைந்த நபர் - போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

போதை மறுவாழ்வு மையத்தில் மரணமடைந்த நபர் - போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
போதை மறுவாழ்வு மையத்தில் மரணமடைந்த நபர் - போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

போதை மறுவாழ்வு மையத்தில் எலெக்ட்ரிசியன் சந்தேகமான முறையில் மரணமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடித்து கொலை செய்துவிட்டதாக மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். நடந்தது என்ன? காவல்துறை விசாரணை என்ன? அதுகுறித்து பார்க்கலாம்.

போதைக்கு அடிமையானவர்களை மீட்டு புதுவாழ்வு அளிப்தற்காகவே போதை மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டது. ஆனால், சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தால் தனது கணவர் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஆட்டோவுக்கு எலெக்ட்ரீசியன் பணிகளை செய்துகொடுக்கும் வேலையை செய்துவந்தார். ராஜ் மதுபோதைக்கு அடிமையானதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மது பழக்கத்திற்கு அடிமையான கணவர் ராஜை மது பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக அவரது மனைவி கலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராயப்பேட்டை பகுதியில் உள்ள "MADRAS CARE CENTRE" என்ற தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். சில நாட்கள் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய ராஜ் மீண்டும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.

நேற்று இரவு ராஜ் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். மேலும் போதையில் தெருவில் நின்று மனைவியுடன் தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதனால் ராஜின் மனைவி கலா இதுகுறித்து ராயப்பேட்டையில் உள்ள "MADRAS CARE CENTRE" போதை மறுவாழ்வு மையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். மையத்தின் ஊழியர்கள் வந்து ராஜை அழைத்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மையத்தின் ஊழியர்கள் கலாவை தொடர்புகொண்டு "உங்கள் கணவர் கீழே விழுந்து விட்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

மருத்துவமனைக்குச் சென்ற கலா தனது பிள்ளைகளுடன் கணவரை பார்க்க முயன்றுள்ளார். ஆனால் மையத்தின் ஊழியர் சிலர் தடுத்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பார்த்தபோது ராஜ் இறந்துவிட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இறந்து போன ராஜ்ஜிற்கு தலையில் ரத்த காயம் இருந்துள்ளது. உடலிலும் பல இடங்கல் காயங்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி கலா, கணவரை போதை மேறுவாழ்வு மையத்தினர் அடித்து கொலைசெய்து விட்டதாகவும், இதனால் உரிய நடவடிக்கை எடுத்து மையத்திற்கு சீல் வைக்கவேண்டும் என்றும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ராயப்பேட்டையில் உள்ள "MADRAS CARE CENTRE" போதை மறுவாழ்வு மையத்திற்கு திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் பகலவன், உதவி ஆணையர் பாஸ்கர் மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். அங்கு 19 நோயாளிகள் உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தினர். மையத்தில் இருந்து உடைந்து கிடந்த லத்திகள் உள்ளிட்ட சில பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் போதை மறுவாழ்வு மைய மேலாளர் மோகன், ஊழியர், ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு 2021-ஆம் ஆண்டு ராஜ் சிகிச்சைக்காக "MADRAS CARE CENTRE"- ல் சேர்ந்தார். சிகிச்சை பெற்ற பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் அந்த மையத்தில் சிகிச்சை பெறுபவர்களை அடித்து கொடுமைப்படுத்துவதாக அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்து ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை வேறு மையத்திற்கு மாற்ற செய்தார். இதனால் மையத்தின் உரிமையாளர் கார்த்திக் (எ) கார்த்திக்கேயன் ஆத்திரமடைந்து ராஜியின் மகன் மணிகண்டனை அழைத்து "உன் தந்தையை கொலை செய்து விடுவேன்" என மிரட்டி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் நேற்று இரவு "MADRAS CARE CENTRE" மையத்திற்கு கொண்டு வந்த பிறகு அங்கிருந்த ஊழியர் சதீஷ் அருகிலிருந்த "மாப் கட்டையால் ராஜை தலை, மார்பு, கை, உடலில் பல பகுதிகளில் தாக்கியுள்ளார். மற்றொரு ஊழியரான யுவராஜ் என்பவர் கேபிள் வயரால் அவரை தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சமையல்காரர் சரவணன், ஊழியர் செல்வமணி சுடுதண்ணீரை ஊற்றித் தாக்கியதும் தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல்களை முதல் தகவல் அறிக்கையில் அண்ணாசாலை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். "MADRAS CARE CENTRE" மையத்திற்கு சீல் வைக்கும்படி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு காவல்துறையினர் கடிதம் எழுதி உள்ளனர். இதையடுத்து அந்த மையத்திற்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கார்த்திக் தப்பி ஓடிவிட்டதாகவும், அவரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதை மறுவாழ்வு மையங்களுக்கு மாநில மனநல மருத்துவ ஆணையம் தான் உரிமம் வழங்கி வருகிறது. "MADRAS CARE CENTRE" மையத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக அண்ணாசாலை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com