13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் கைது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் கைது
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் கைது

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘’மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து தனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 8 பேரையும் கைது செய்தார்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா ஆகிய 4 பேர் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாக செயல்பட்டு, வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால், கண்டிப்பாக இதேபோல பல சிறுமிகளை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இதனால் கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், இவர்களை தவிர முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், சந்தியாவிடம் விசாரணை நடத்தியதில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தரகரான ராஜேந்திரன் (44) என்பவர் தனக்கு நெருக்கமான நண்பர் என்றும் அவர் பலமுறை இந்த 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என்றும் தெரிவித்தார். 

அதைத்தொடர்ந்து, ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக கூறினார்.

இதையடுத்து, துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நேற்று இரவு இன்ஸ்பெக்டர் புகழேந்தியை கைது செய்தார். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தியை, கூடுதல் கமிஷனர் அருண் பரிந்துரையின்பேரில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திரன், பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com