வாட்ஸ்அப் மெசேஜ்களை டெலிட்செய்த ஆசிரியர் ராஜகோபாலன்: பாலியல் புகாரில் 5 பிரிவுகளில் வழக்கு

வாட்ஸ்அப் மெசேஜ்களை டெலிட்செய்த ஆசிரியர் ராஜகோபாலன்: பாலியல் புகாரில் 5 பிரிவுகளில் வழக்கு
வாட்ஸ்அப் மெசேஜ்களை டெலிட்செய்த ஆசிரியர் ராஜகோபாலன்: பாலியல் புகாரில் 5 பிரிவுகளில் வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்களை அனுப்புகிறார். அரைகுறை ஆடையுடன் ஆன்லைனில் பாடம் நடத்துகிறார். இப்படி மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து இணையதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. சென்னை கே.கே.நகர் அழகிரிசாமி சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன், மாணவி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பாக முன்னாள் மாணவர்கள் புகார் அளித்த நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வெடித்தது.

பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து விசாரணை நடத்துவதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பள்ளிக்கு சென்றார். ஆனால் அவர் விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை. இப்பிரச்னையில் பள்ளி நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அழுத்தம் அதிகரிக்கவே ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம். இன்னொரு பக்கம் ராஜகோபாலனிடம் விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. வடபழனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தி.நகர் துணை ஆணையர் ஹரிஹரன் ஆகியோர் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ராஜகோபாலனை அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே நங்கநல்லூரில் உள்ள ராஜகோபாலன் வீட்டிலிருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது வாட்ஸ் அப் மெசேஜ்களை ராஜகோபாலன் டெலிட் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை காவல்துறையினர் ரெக்கவர் செய்தனர். ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் அவர் 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்ததாகவும், வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக, அந்தப்பள்ளியைச் சேர்ந்த மேலும் சிலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளாராம்.

இதற்கிடையே ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் புகார் அளிக்க முன்வரவேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. துணை ஆணையர் ஜெயலட்சுமியின் கைபேசி எண்ணான 94447 72222-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் கூறப்பட்டுள்ளது. புகார்தாரர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com