முன்னாள் ராணுவ வீரர் கொலையில் திடீர் திருப்பம்: மனைவியே அடியாட்கள் வைத்து கொன்றது அம்பலம்

முன்னாள் ராணுவ வீரர் கொலையில் திடீர் திருப்பம்: மனைவியே அடியாட்கள் வைத்து கொன்றது அம்பலம்

முன்னாள் ராணுவ வீரர் கொலையில் திடீர் திருப்பம்: மனைவியே அடியாட்கள் வைத்து கொன்றது அம்பலம்
Published on
நாமக்கல் அருகே முன்னாள் ராணுவ வீரரை கூலியாட்கள் வைத்துக் கொன்றதாக அவரது மனைவி உள்பட் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ராசிபாளையம் ஊராட்சி மாருதி நகரில் வசித்து வந்தவர் சிவகுமார். கடந்த ஏப்ரல் மாதம் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் மனைவி பார்கவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 6-ம் தேதி மோகனூர் அருகே உள்ள ஊனாங்கல்பட்டி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கபட்டார். சிவகுமார் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த மோகனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் சிவகுமாரின் செல்போன் தொடர்புகளை வைத்து, வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் செல்வராஜ், சிவகுமாரின் மனைவி பார்கவி, மாமியார் அம்சவள்ளி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அண்ணன், தங்கை உறவு முறை கொண்ட செல்வராஜுக்கும், பார்கவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது சிவகுமாருக்கு தெரிய வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
(இறந்து போன ராணுவ வீரர் சிவகுமார்)
இது சிவகுமாரின் மாமியார் அம்சவள்ளிக்கு தெரிய வந்த நிலையில், பார்கவியும், அம்சவள்ளியும் செல்வராஜுடம் சிவகுமாரை ஏதாவது செய்திட வற்புறுத்திய உள்ளனர். இதனையடுத்து சிவகுமாரை கொலை செய்ய திட்டமிட்டு தனது லாரி ஓட்டுநர் பரமேஸ்வரன் மூலம் லாரி மோதி கொல்ல மேற்கொண்ட 2 முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. இதனையடுத்து கூலிப்படை மூலம் கொல்ல திட்டமிட்டு பரமேஸ்வரன் மூலம் 2 லட்ச ரூபாய் தொகைக்கு கொலை செய்ய சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்த விமல் ஆனந்த், சுரேஷ், கலைமணி, சிலம்பரசன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி மாலை சிவகுமார் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்த கூலிப்படையினர் அவர் வீடு திரும்பும் போது பின் தொடர்ந்து வந்து ஊனாங்கல்பட்டி அருகே இருசக்கர வாகனத்தை மறித்து அவரை இரும்பு ராடால் தாக்கி கத்தியால் கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட 21 இடங்களில் குத்திக் கொலை செய்து விட்டு சடலத்தை சாலை ஓரமாக வீசி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து சிவகுமாரின் மனைவி பார்கவி, மாமியார் அம்சவள்ளி, செல்வராஜ், மற்றும் கூலிப் படையை சேர்ந்த பரமேஸ்வரன், விமல் ஆனந்த், சுரேஷ், கலைமணி, சிலம்பரசன் ஆகிய 8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய இரும்பு ராடு, 2 கத்தி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல், சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com