தனியாக செல்பவர்களிடம் வழிப்பறி ! கைது செய்யப்பட்ட கும்பல்
சென்னையில் தனியாக செல்லும் நபர்களிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் தங்க நகை பறிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் பகுதிகளில் அடிக்கடி தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பதிவுவான காட்சிகளை காவல்துறையினர் சேகரித்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வரும் 2 வாலிபர்கள் சாலையில் தனியாக வரும் நபர்களிடம் முகவரி கேட்பது போல் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் தங்க நகை பறித்து கொண்டு பின்னர் கத்தியைக்காட்டி மிரட்டி வெட்ட ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதனைதொடர்ந்து மதுரவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்திய காவல்துறையினர் ஆலப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை மடக்கி விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரனாக பதில் கூறினார்கள். இதையடுத்து 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது மதுரவாயலை சேர்ந்த ரமேஷ்(20), அஜித்(22), திருவேற்காட்டை சேர்ந்த கார்த்திகேயன்(23), என்பதும் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன், நகை போன்றவற்றை பறித்து செல்லும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் வழிப்பறி செய்த நகை,பணத்தை கொண்டு மதுபோதை உல்லாசம் என சொகுசாக வாழந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்த 4 பவுன் நகைகள், 3 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.