சென்னையில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த 23ஆம் தேதி தேனாம்பேட்டை சீதாம்பாள் காலனியில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். வழிப்பறிப்பின்போது கொள்ளையர்கள் பிடியில் சிக்கிய அந்த பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்படாத நிலையில், ஐஸ் ஹவுஸ், கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் சுமார் 29 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து சங்கிலிப் பறிப்புச் கொள்ளையில் ஈடுபட்ட மூலக்கடையை சேர்ந்த ராகேஷ் என்ற ரவுடியை 36 மணி நேரத்தில் கைது செய்தனர்.
பின்னர் தலைமறைவாக இருந்த மற்றொரு கொள்ளையனான சீனு என்பவரை இன்று கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்துப் பதுக்கி வைத்திருந்த நகைகள் இருக்கும் இடம் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த நகையைக் கைப்பற்றி சோதனைக்கு உட்படுத்தினர். அதில் அந்த நகை கவரிங் எனத் தெரியவந்தது. மேலும் அனைத்தும் நகைகளும் கவரிங் எனத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சீனுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.