“ஹலோ.. உங்களுக்கு கார் பரிசாக கிடைச்சிருக்கு” - வலைவிரிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்

“ஹலோ.. உங்களுக்கு கார் பரிசாக கிடைச்சிருக்கு” - வலைவிரிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்
“ஹலோ.. உங்களுக்கு கார் பரிசாக கிடைச்சிருக்கு” - வலைவிரிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்

ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதால் பல லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுந்ததாக கூறி ஆசை வார்த்தை காட்டி நூதன முறையில் மோசடி செய்ய முயன்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மளிகை கடை வைத்திருப்பவர் குரு. இவர் கடந்த 4 மாதங்களாக கொரோனா என்பதால் தனக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் சிலவற்றை தனது செல்போனை பயன்படுத்தி ஆன்லைன் (SNAP DEAL) மூலமாக வாங்கி வந்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட மோசடி கும்பல் அவருடைய தொலைபேசி எண்ணுக்கு இன்று மதியம் போன் செய்து "நீங்கள் ஆன்லைனில் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கியதால் சிறப்பு பரிசு வழங்க உங்களுடைய தொலைபேசி எண் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பரிசாக 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் வழங்கப்பட உள்ளது. இதனை நீங்கள் பணமாகவும் பெற்று கொள்ளலாம் அல்லது உங்களுடைய வீட்டு முகவரிக்கு சொகுசு காராகவும் டோர் டெலிவரி செய்யப்படும்.

ஆனால், நீங்கள் இந்த சிறப்பு பரிசை பெறுவதற்கு முன் பணமாக ரூபாய் 6 ஆயிரம் எங்களுடைய வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தும் பணம் உங்களுக்கு வழங்கப்படும் காருக்கான சாலை வரி. நீங்கள் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு உங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பப்படும்" என பெண் ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போன மளிகை கடைக்காரர் அவருடைய நண்பரான ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் குகனேஸ்வரனிடம் இது குறித்து கூறியுள்ளார்.

உடனடியாக சார்பு ஆய்வாளர், மோசடி கும்பல் பேசிய அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது, உங்களுடைய எண்ணிற்கும் சிறப்பு பரிசாக 12 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்து போன சார்பு ஆய்வாளர் தான் காவல்துறையை சேர்ந்தவர் என்றும் நீங்கள் எந்த ஊரில் இருந்து போன் செய்கிறீர்கள் எனவும் கேட்டவுடன் அந்த பெண் தொடர்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து அந்த தொலைபேசி எண் குறித்து குரு அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் அந்த எண் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com