கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்த கும்பலை பிடிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டேரி பிரிக்லின் சாலை அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ரோந்து சென்ற ஓட்டேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஷஜிபா, சேகர் என்பவரை மதுபாட்டிலுடன் மடக்கிப் பிடித்தார். கூடுதல் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனையிடச் சென்றனர்.
அப்போது, அங்கிருந்த சிலர் பெண்களோடு சேர்ந்து உதவி ஆய்வாளர்கள் ஷஜிபா மற்றும் மணிவண்ணன், காவலர் சங்கர் தாக்கிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தலைமறைவாக உள்ள 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.