'நீதான் தைரியமான ஆளாச்சே' காவல்துறைக்கு சவால்விட்டு ஏடா கூடமாக சிக்கிய 'பைக் ரேஸர்கள்'
காவல்துறையினருக்கு சவால் விட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர். பிடிபட்ட கும்பலில், சிறப்பு உதவி ஆய்வாளர் மகன் உள்பட 5 பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கைதை தொடர்ந்து, பைக் சாகசம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் மூலம் தகவலை பரப்பும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 19-ம்தேதி மெரீனா கடற்கரை சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்திய இளைஞர்கள் தொடர்பான வீடியோ வெளியானது. இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர், 2 சிறுவர்கள் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 21-ம்தேதி வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரி அருகில் சில இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அவர்கள் இன்ஸ்டாகிராமில் `முடிந்தால் எங்களை பிடித்து பாருங்கள்’ என்று காவல்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் பதிவிட்டு இருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவுகளை கைப்பற்றி சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு இளைஞர்களை அடையாளம் காணும் முய்ற்சியில் ஈடுபட்டனர். அதில் வியாசர்பாடி பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டிவின் குமார், மோவின், ஹரீஷ் குமார், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, திருவொற்றியூரைச் சேர்ந்த சல்மான் ஆகியோர் என்பது தெரிந்தது. 5 பேரையும் கைது செய்து விலை உயர்ந்த 5 பைக்குகளையும் போலீசார் கைப்பற்றினர். போலீஸ் விசாரணையில் டிவின் குமார் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் தனசேகர் என்பவரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
கைதானவர்கள் தவிர்த்தும், இக்கும்பலில் நிறைய பேர் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு, இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸில் பதிவிட்டு வருகின்றனர். அதில், “போலீசார் தொடர்ந்து கைது செய்து வருவதால் சிறிது நாட்கள் யாரும் பைக் வீலிங் செய்ய வேண்டாம். போலீசிடம் சிக்கி கொள்ளாதீர்கள்” என பதிவிட்டிருக்கிறார்கள்.
இதனை பதவு செய்தவர்கள் யார் யார், மேற்கொண்டு பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட ஏதேனும் அறிவிப்புகள் வெளிவருகிறதா உள்ளிட்டவற்றையெல்லாம் கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.