திருடிய போனை வைத்து செல்ஃபி எடுத்த கொள்ளையர்கள் - காட்டிக் கொடுத்த இமெயில்
திருடிய செல்போனை வைத்து செல்ஃபி எடுத்த திருடர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளையைச் சேர்ந்தவர் மகேஷ்(35). இவர் சமையல் கலைஞராக வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் தூங்கி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள், கைக்கடிகாரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருடப்பட்ட செல்போனிலிருந்து கொள்ளையர்கள் தங்களை விதவிதமாக செல்ஃபி எடுத்துள்ளனர். அந்தப் படங்கள் மகேஷின் இ மெயிலுக்கு வந்துள்ளன. இது குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து செல்போன் சிக்னலை வைத்து குன்றத்தூர், கரைமா நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி (20), அவரது மாமா சுரேஷ்(22) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது இரவு நேரத்தில் குடித்து இவருவரும் திறந்து கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்வது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடிய செல்போனிலேயே செல்ஃபி எடுத்தால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.