சென்னை: நகை திருடுபோனது அதன் சொந்தக்காரருக்கு தெரியும் முன்பே திருடியவர் கைது!
மாங்காடு திருமண மண்டபத்தில் நகை திருடு போனது, அதன் உரிமையாளருக்கு தெரியும் முன்பே நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாங்காடு போலீசார் பரணி புத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் நின்றிருந்தார். அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். அவரிடம் மேலும் விசாரணை செய்தபோது திருமண மண்டபத்தில் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பொழிச்சலூரை சேர்ந்த பன்னீர்தாஸ் (என்ற) பன்னீர்செல்வம் (23) என்பது தெரிந்தது. அவரது பாக்கெட்டை சோதனை செய்ததில் 7.5 பவுன் நகைகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்தது. 'இதை எந்த திருமண மண்டபத்தில் திருடினாய்?' என்று கேட்டபோது, நகை திருடிய திருமண மண்டபத்தை காட்டினார். அங்கு போலீசார் அவரை அழைத்து சென்றனர்.
அப்போது, திருமண மண்டபத்தின் மேல் அறையில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு நகை, செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது நகை உரிமையாளரான பம்மலை சேர்ந்த விஜயகுமாருக்கு தெரியவந்தது. திருமண மண்டபத்தின் அறையில் நகை பைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் பன்னீர்தாஸ் மேலே சென்று நகையை திருடியது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் பன்னீர்தாஸின் தந்தைக்கு இரண்டு மனைவிகள்; அவர்கள் குடும்பத்தில் இவரோடு சேர்த்து மொத்தம் 11 பிள்ளைகள் என குடும்பம் பெரியது. போதிய வருமானம் இல்லை. பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள இவர் சரியான வேலை போதிய வருமானம் இல்லாத காரணத்தால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
நகை திருடுபோனது அதன் உரிமையாளருக்கு தெரியும் முன்பே திருடியவரை போலீசார் கைது செய்து,0 கொள்ளை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றபோதுதான் நகை கொள்ளை போனதே தெரியவந்தது.

