வெள்ளிகிழமைகளில் மட்டுமே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக, விநோத நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த பொருட்களை விற்று பணமாக்கிய அவர், மதுரையில் கரும்பு விவசாயம் செய்துவருவது தெரியவந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள செல்ஃபோன் கடையில் நூதனத் திருட்டு சம்பவம் நடைபெற்றது. கடைக்கு முதியவருடன் சென்ற நபர், ஒருவர் அங்கு ரூ.20,000 மதிப்புள்ள 5 செல்ஃபோன்களை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்தால் பணம் தருவதாக கூறி, முதியவரை கடையில் அமரவைத்துவிட்டு உடன் வந்த கடைக்காரரையும் ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். மயிலாப்பூரில் இருந்து வடபழனி வரை உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வடபழனியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசாரிடம் அந்தச் சந்தேக நபர் சிக்கினார்.
விசாரணையில் அந்த நபர் மதுரையைச் சேர்ந்த சிவக்குமார் என்பதும் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது. முதியவர்களை குறி வைக்கும் சிவக்குமார், கவனத்தை திசைதிருப்பி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல் 200க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வெளியே வரும்போது முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஏடிஎம் அட்டையுடன் ரகசிய எண்ணை வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை வழிப்பறி செய்வதையே வழக்கமாகவும், சென்டிமெண்டாகவும் வைத்திருந்த சிவக்குமார் கொள்ளையடித்த பொருட்களை விற்று பணமாக்கி சொந்த ஊரான மதுரையில் 42 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிவக்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.