வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி: மருத்துவமனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நவி மும்பையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை வழக்குப்பதிவு செய்து 4 மாதங்களுக்குப் பிறகு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ஜூன் மாதம் ஒரு 15 வயது பெண் தனக்கு மிகவும் வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். வயிற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கக்கூடும் என சந்தேகித்த பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று பரிசோதித்ததில் 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அந்தப் பெண்ணை விசாரித்ததில் அதேபகுதியில் வடா பாவ் விற்கும் நபர்தான் கர்ப்பத்திற்குக் காரணம் என தெரியவந்திருக்கிறது. உடனே இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதுதெரிந்த அந்த ஆள் அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்.
ஆனால் அந்த நபரின் முழுப்பெயர் தெரியாததால் போலீஸாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அருகிலிருந்தவர்களிடம் விசாரித்ததில் அந்த நபர் தனது சொந்த ஊரான பீஹாருக்கு சென்றுவிட்டது தெரியவந்திருக்கிறது. அந்த நபரைக் குறித்து விவரம் தெரிந்தால் கூறுமாறு போலீஸார் எச்சரித்துச் சென்றிருக்கின்றனர்.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் நவிமும்பைக்கு திரும்ப வந்துவிட்ட தகவலை போலீஸாருக்குக் கொடுத்திருக்கின்றனர். சரியான நேரத்தில் போலீஸார் விரைந்துசென்று அந்த நபரை கைது செய்திருக்கின்றனர். விசாரித்ததில் 2018ஆம் ஆண்டே ஒரு சிறுமியை கடத்திய குற்றம் மற்றும் மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.