‘டிக்கெட்லா எடுக்க முடியாது’ - அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிய போதை ஆசாமி
நடத்துனருடன் ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் பேருந்து பணிமனையில் இருந்து சென்ட்ரல் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று புறப்பட்ட நிலையில் ஜெயந்தி தியேட்டர் சிக்னல் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபரொருவர் பேருந்தில் ஏறியுள்ளார். மது போதையில் பேருந்தில் ஏறிய அந்த நபரிடம் நடத்துனர் வடிவேலு டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார், அதற்கு டிக்கெட் எடுக்க முடியாது எனக் கூறிய அவர், நடத்துனர் வடிவேலை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு எல்.பி சாலையில் இறங்கி அந்நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

