குற்றம்
சென்னை: மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் ரூ.18 லட்சம் திருட்டு
சென்னை: மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் ரூ.18 லட்சம் திருட்டு
மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 3 பேரை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடமிருந்து 18 லட்சம் ரூபாயை திருடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தனக்கு அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும், மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகவும் முருகன் என்பவர் கள்ளக்குறிச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ரத்னகுமாரியிடம் வாக்களித்துள்ளார். ரத்னகுமாரி மற்றும் அவருக்கு தெரிந்த சின்னையா, சுரேஷ் ஆகியோருக்கு வேலை வாங்கித் தருவதற்கு மொத்தம் 18 லட்சம் ரூபாய் வேண்டும் என சொல்லியிருக்கிறார். அமைச்சரை நேரில் பார்த்து பேசி வேலையை வாங்க பணத்துடன் சென்னை வரும்படி முருகன் அழைத்திருக்கிறார்.
அதன்படி அவர்கள் கார் மூலம் சென்னை வந்து வடபழனியில் உள்ள ஆதித்யா ஹோட்டலில் இரண்டு அறைகளில் தங்கியுள்ளனர். முருகனும் அதே ஹோட்டலில் பக்கத்து அறையில் தங்கியிருக்கிறார். கோடம்பாக்கத்திலிருந்து மற்றொரு காரை எடுத்து வரலாம் எனக் கூறி சுரேஷ், சின்னையா ஆகியோரை அழைத்துள்ளார். அவர்கள் 18 லட்சம் ரூபாயை ஒரு பையில் போட்டு அதை ஹோட்டல் அறையிலேயே விட்டுச் சென்றனர். கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகே காரிலிருந்து இறங்கிய முருகன் காரை திருப்பிக்கொண்டு வரும்படி கூறியுள்ளார். அவர்கள் காரை திருப்பிக்கொண்டு வந்தபோது முருகனை காணவில்லை.
இதையடுத்து சுரேஷ், சின்னையா இருவரும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து முருகனுக்காக காத்திருந்தனர். முருகன் வராததால் சந்தேகமடைந்த ரத்னகுமாரி பணப்பையை சோதித்துள்ளார். அப்போதுதான் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் பின்னர் ரத்னகுமாரி, சென்னையா, சுரேஷ் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.