'தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்' - இறப்பதற்கு முன் உதவி கோரி வீடியோ வெளியிட்ட இளம்பெண்
டெல்லி அருகே ஹோட்டலில் இறந்து கிடந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எம்என்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயதான் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் கூறினர். ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதனை சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் உடன் பணியாற்றி வரும் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, திங்கள்கிழமை காலையில் தனது நண்பருக்கு அவசர உதவி கோரும் எஸ்ஓஎஸ் மூலமாக வீடியோ ஒன்று அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், நொய்டாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வரும் ஒருவர் தன்னை துன்புறுத்தி வருவதாகவும் தயவுசெய்து தன்னை காப்பாற்றும்படியும் அந்த பெண் கதறி அழுகிறார். இதையடுத்து அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார் அந்த பெண் கூறும் கணினி ஆபரேட்டராக தேடி வருகின்றனர்.
பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக ஹோட்டலை புக் செய்து வந்ததும், ஹோட்டலுக்கு தனியாக அந்த பெண் வந்துள்ளதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: குடிபோதையில் கார் ஓட்டி மூன்று பேர் பலி: பெண் மருத்துவரை வழக்கிலிருந்து விடுவிக்க மறுப்பு

