பிரான்மலையை சிதைக்கும் கல்குவாரிகள் – வள்ளல் பாரியின் மலைக்கு ஆபத்து?
வள்ளல் வேள்பாரி ஆட்சிசெய்த பிரான்மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிகளால் அம்மலையே சிதைந்துபோகும் என்று குமுறுகின்றனர் ஊர்மக்கள். எனவே அரசு உடனடியாக தலையிட்டு இப்பகுதியில் இயங்கும் கல்குவாரிகளை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
வள்ளல் வேள்பாரி ஆட்சி செய்த மலை பறம்புமலை. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள பிரான்மலைதான் பறம்புமலை என்று நம்பப்படுகிறது. இந்த மலையில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த கோவில்கள், சிற்பங்கள் உள்ளன. மேலும் எண்ணற்ற விலங்கினங்கள், பறவைகள், தாவரங்கள் போன்றவை வாழக்கூடிய பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் இம்மலை இருக்கிறது. தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக விளங்குக்கூடிய வேள்பாரியின் நினைவாக உள்ள பிரான்மலையின் பெரும்பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று ஒரு தனியார் குடும்பம் உரிமைகொண்டாடி வருகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்
சமூக செயற்பாட்டாளர் கர்ணன் பேசும்போது “ ஆரம்பத்தில் பிரான்மலையில் ஒருபகுதியில் அந்த தனியார் குடும்பம் சார்பாக, தங்கள் முன்னோர் ஒருவருக்கு ஜீவசமாதி கோவில் கட்டினார்கள், அதற்கு பாதையும் அமைத்தார்கள். ஆனால் அந்த பாதையையும் தற்போது பொதுமக்கள் செல்வதற்கு திறந்துவிடுவதில்லை. இப்போது பிரான்மலையின் அடிவாரத்திலுள்ள தேனம்மாள்பட்டி என்னும் கிராமத்திற்கு அருகிலுள்ள இரண்டு மலைக்குன்றுகளில் கல்குவாரி அமைத்துள்ளனர். இந்த குன்றுகள் சுமார் 200 அடி உயரம் உடையவை, இதில் கடந்த ஒன்றரை வருடங்களாக குவாரி அமைத்துள்ளனர். ஆரம்பத்தில் ஏதேனும் பாதைகளை சுத்தம் செய்கிறார்களோ என்று நினைத்து இருந்துவிட்டோம். இப்போதுதான் அது கல்குவாரிகள் என தெரிகிறது” என்று அதிர்ச்சியுடன் சொல்கிறார்
தொடர்ந்து பேசும் அவர் “ பிரான்மலை என்பது தமிழர்களின் தொல்லியல் சின்னம். இதன் அடிவாரத்தில் கல்குவாரிகள் அமைத்தால் நிச்சயமாக மலையில் கோவில், சிற்பங்கள், தொல்லியல் சின்னங்கள் சிதைந்துபோகும். இந்த மலையில் இரண்டு தளங்களை கொண்ட மிகத்தொன்மை வாய்ந்த திருக்கொடுங்குன்றநாதர் கோவில் உள்ளது, மலையை குடைந்து குடைவரை கோவிலாக உருவாக்கியுள்ளனர். மேலும் இங்கு பழமைவாய்ந்த முருகன் கோவிலும் அமைந்திருக்கிறது. இதுதான் பாரிவள்ளல் வாழ்ந்த பறம்புமலை என்பதற்கு பல்வேறு இலக்கிய ஆதாரங்களும் காட்டப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் பழமைவாய்ந்த தர்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த மலையில் இரு சமயத்தவர்களும் ஒன்றாக இணைந்து ஏறுவார்கள். ஒவ்வொரு கிரிவலத்திற்கும் இந்த மலையையே புனிதமாக நினைத்து சுற்றிவருவார்கள். அரசு நினைத்தால் பிரான்மலையை மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட சுற்றுலா மையமாக மாற்றலாம்” என்கிறார் கவலையுடன்
பாரி என்ற ஒரு குறுநில மன்னனை எதிர்த்து மூவேந்தர்களும் ஒன்றாக நின்றுதான் வெற்றிபெற்றனர். பாரியின் உயிர்நேயம் காரணமாக அவனது போருக்கு விலங்குகள்,பறவைகள்கூட துணைபுரிந்ததாக சொல்வார்கள். யவனர்கள் வேள்பாரியை சந்தித்து பறம்புமலையில் உள்ள சந்தன மரங்களை வெட்டிக்கொள்கிறோம், அதற்கு ஈடாக எதுவேண்டுமானாலும் தருகிறோம் என்று கேட்டனராம். அதற்கு பதில் சொன்ன பாரி இந்த மலையில் உள்ள மரங்களில் இருந்து காய்,கனிகளை மட்டுமே பறிக்கலாம். ஆனால் மரங்களை வெட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கண்டிப்புடன் சொன்னதாக கூறுவார்கள். இதுபோல இந்த மலையில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களையும் நேசித்த மன்னன் பாரிவேந்தன். அத்தகைய பறம்பு மலையையே கல்குவாரியாக்கும் செயலை உடனடியாக அரசு தடுத்து நிறுத்தவேண்டும். பிரான்மலை முழுமையையும் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக மாற்ற வேண்டும் என்கிறார் கர்ணன்
முல்லைக்கொடிக்காக தனது தேரையே கொடுத்த உயிர்நேசன் வள்ளல் பாரி, அவன் தன் உயிராக நேசித்த பறம்புமலையை அரசு காக்குமா?

