சேப்பாக்கம் சிஎஸ்கே - டெல்லி போட்டிக்கான டிக்கெட் விற்பனை: கள்ள டிக்கெட் வாங்க வந்தவர்கள் கைது!

ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி வரும் 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Chepauk
ChepaukPT Desk

சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பதற்காக சிலர் சேப்பாக்கத்தில் குவிந்தனர். அப்படி குவிந்தவர்களில் ஏழுக்கும் மேற்பட்டோரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Chepauk
ChepaukPT Desk

ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி வரும் 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ரூ.1500, 2000, 2500-க்கான நேரடி டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பெண்களுக்கு தனி வரிசையும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 10:30 முதல் 11 மணி வரை சிறப்பு வரிசையும் அமைக்கப்பட்டு டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டி டிக்கெட் விற்பனையின் போது காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் இந்த முறை, கௌண்டர் அருகே தடுப்புகள் பலமாக அமைக்கப்பட்டிருந்தன. ஆன்லைன் மற்றும் ஸ்பான்சர்களுக்காக பெரும்பான்மையான இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 5,000 டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த முறை டிக்கெட் விற்பனை நடைபெறும் போது சந்தேகப்படும்படியாக இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

arrest
arrestPT DESK

குறிப்பாக டிக்கெட் வாங்குவதற்காக இரவிலிருந்து மைதானத்திற்குள் பதுங்கியிருந்த நால்வர், மீண்டும் டிக்கெட் வாங்குவதற்காக வரிசைக்குள் ஒழுங்கற்ற முறையில் புகுந்த இருவர் என ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருசிலரும் கைதுசெய்யப்பட்டனர்.

பொதுவாக காலை 9:30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வெயில் காலம் என்பதாலும் இன்று காலை 7 மணிக்கு விற்பனை தொடங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com