நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவரை விடுவிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு

நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவரை விடுவிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு
நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவரை விடுவிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 10 ஆயிரம் ரூபாய் அனுப்பிய வழக்கில், போக்குவரத்துக்கழக ஊழியரை விடுவிக்க சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.

முன்னதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றிய பாலசுப்பிரமணியன், ஒழுங்காக பணிக்கு வராத காரணத்துக்காக பணி நீக்கப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தன்னை வேலையில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக்கூறி அந்த நபர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 2018-ம் ஆண்டு தபால் மூலம் ஒரு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவுடன் 10 ஆயிரம் ரூபாயையும் அனுப்பி வைத்துள்ளார்.



இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், “நீதி பரிபாலனத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு, தனக்கு சாதகமான உத்தரவை பெற தலைமை நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்” எனக்கூறி அந்த போக்குவரத்துக்கழக பணியாளர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதியப்பட்ட பின்னர், தான் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறி, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அவர் தரப்பில் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், மனுதாரர் (போக்குவரத்துக்கழக ஊழியர்) உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர் தானா என்பதை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அந்தப் பரிசோதனை முடிந்த பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், “மனுதாரருக்கு தன் மீதான குற்றச்சாட்டு குறித்தும், நீதிமன்ற விசாரணை குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. நினைவாற்றால், சிந்தனை, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன் போன்றவை போதிய அளவில் உள்ளது” என்றும் கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்று, வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய போக்குவரத்துக் கழக பணியாளர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com