பெரம்பலூர் அருகே பட்டா பெயர் மாற்றுதலுக்கு ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கிராம பெண் வருவாய் ஆய்வாளர் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் அருகேயுள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி இந்திராணி (35). இவர், கொளக்காநத்தம் பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அய்யலூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி முத்தரசி (30) என்பவர், பட்டா பெயர் மாறுதலுக்காக மனு செய்திருந்தார். அப்போது, அந்த மனு மீது விசாரணை நடத்தி பட்டா மாறுதல் வழங்குவதற்கு வருவாய் ஆய்வாளர் இந்திராணி ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தரசி, பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகிய நிலையில், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையிலான குழுவினரின் ஆலோசனைபடி, முத்தரசி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இந்திராணியிடம் கொடுத்தபோது கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதுகுறித்து இந்திராணியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் வாங்கி பிடிபட்டுள்ள வருவாய் ஆய்வாளர் இந்திராணி கடந்த 10 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் வருவாய் ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.