'மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை' - உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர்

'மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை' - உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர்
'மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை' - உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்ததை, நான்கு வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.



இதுதொடர்பாக சென்னை காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.



இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் துரதிஷ்டவசமாக பார்வேர்ட் செயத்தாகவும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்யபட்டது. விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com