ஆன்லைன் சூதாட்டம் மூலம் ரூ.10 கோடி மோசடி: 4 இடைத்தரகர்கள் கைது

ஆன்லைன் சூதாட்டம் மூலம் ரூ.10 கோடி மோசடி: 4 இடைத்தரகர்கள் கைது
ஆன்லைன் சூதாட்டம் மூலம் ரூ.10 கோடி மோசடி: 4 இடைத்தரகர்கள் கைது

ஆன்லைன் சூதாட்டம் மூலம் 10 கோடி ரூபாய் மோசடி செய்த நான்கு இடைத்தரகர்களை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த அரசு என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆன்லைன் மூலமாக சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், அப்போது சில ஆட்டங்களில் ஜெயிக்க வைத்து பின்னர் பல லட்சம் ரூபாய் வரை இழந்து விட்டதாகவும், ஒரு கும்பல் இந்த மோசடி செயலில் ஈடுபடுவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த புகார் தமிழக சைபர் கிரைம் பிரிவு தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது. புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் பிரிவு எஸ்பி சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆன்லைன் சூதாட்ட நபர்கள் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை வைத்து நடத்திய விசாரணையில் சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த சசிகுமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், முகமது ஆசிப் மற்றும் முக்கிய நபரான அம்பத்தூரை சேர்ந்த சாய் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களின் பணத்தை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி அனுப்பும் இடைத்தரகர் பணியில் கைது செய்யப்பட்ட 5 நபர்களும் செயல்பட்டு வந்துள்ளனர். முதலில் இரண்டு ஆட்டங்களில் ஜெயிக்க வைப்பது போல் ஆசைகாட்டி, பிறகு பணத்தை இழக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதையும் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

100 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை பலரும் இந்த இடைத்தரகர்களிடம் செலுத்தி இழந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரும் இணைந்து தமிழகத்தில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 10 கோடி ரூபாய் வரை ஏமாற்றி இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கைதான 5 பேரிடமிருந்து 2 லேப்டாப், கணினி, 10 செல்போன்கள், 27 ஏடிஎம் கார்டுகள், 4 பென் டிரைவ், 1 மெமரி கார்டு, 340 சிம்கார்டுகள், 1.20 லட்சம் பணம், சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான 5 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளான 120(பி)- கூட்டுச்சதி, 419- ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல், 420- மோசடி, 468- ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 471- பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், 477(ஏ)- கணக்குகளை தவறாக பயன்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு சட்டப்பிரிவுகள், தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு என மொத்தமாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட நபர்கள் 155260 என்ற சைபர் கிரைம் உதவி மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்க வேண்டும் என தமிழக காவல்துறை சைபர் கிரைம் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கைதான 5 பேரையும் தமிழக சைபர் கிரைம் பிரிவு தலைமையகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com