ஒரு தலை காதல்: பெண் கொடுக்க மறுத்த தந்தைக்கு கத்திக்குத்து
ஓசூர் அருகே பெண்தர மறுத்த பெண்ணின் தந்தைக்கு கத்தி குத்து, படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் துளசிநகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவருக்கு பிஇ பட்டதாரியான ஒரு பெண்ணும், 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு பையனும் உள்ளார். இந்நிலையில், முருகேசன் தன் பெண்ணுக்கு ஓசூரைச் சேர்ந்த திலக் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், முருகேசனின் உறவினரான கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் நிச்சயதார்த்தம் ஆன பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தனக்கு பெண் கொடுக்க மறுத்த முருகேசனின் வீட்டிற்குச் சென்ற திருமூர்த்தி, தகராறில் ஈடுப்பட்டதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனை மூன்று முறை குத்திவிட்டு தப்பியோடி உள்ளார், இதையடுத்து காயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஓசூர் தலைமை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கெலமங்கலாம் போலீசார், வழக்குப் பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர். பெண் கொடுக்க மறுத்த தந்தையை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியை பரபரப்பு ஏற்படுத்தியது.