பொது இடத்தில் மது குடித்தவர்களைக் கண்டித்த மாற்றுத்திறனாளி எரித்துக்கொலை
சாலையில் நின்று மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளி தீவைத்து எரித்துக்கொல்லப்பட்ட கொடூரம் திருவாரூரில் நிகழ்ந்துள்ளது.
திருவாரூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த 55 வயதான ஷேக் அலாவுதீன், துணி சலவை செய்யும் கடை முன் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, மது அருந்தியபடி வந்த 5 பேர் கூச்சலிட்டுள்ளனர். அவர்களை ஷேக் அலாவுதீன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், பெட்ரோல் வாங்கி வந்து ஷேக் அலாவுதீன் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி என்பதால் தப்பிக்க முடியாமல் ஷேக் அலாவுதீன் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த காவல்துறையினர், மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.