‘எத்தனை முறைதான் லஞ்சம் கொடுக்க’.. நொந்துபோன இளைஞரால் வசமாக சிக்கிய அதிகாரிகள்..!

‘எத்தனை முறைதான் லஞ்சம் கொடுக்க’.. நொந்துபோன இளைஞரால் வசமாக சிக்கிய அதிகாரிகள்..!
‘எத்தனை முறைதான் லஞ்சம் கொடுக்க’.. நொந்துபோன இளைஞரால் வசமாக சிக்கிய அதிகாரிகள்..!

தருமபுரி மாவட்ட தொழில் மையத்தில் மானிய கடன் வழங்க ரூ.25,000 லஞ்சம் வாங்கிய மேலாளர் மற்றும் உதவி செயற் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அடுத்த நரசையன்கொட்டாயை சேர்ந்தவர் ராம்குமார். வயது 35. இவர் கடந்த 2017ம் ஆண்டு தருமபுரி மாவட்ட தொழிற்மையம் மூலம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்தில் சலவையகம் அமைக்க 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில் முதல் கட்ட மானியம் பெற மாவட்ட தொழில்மைய அதிகாரிகள் இவரிடம் இருந்து 30,000 ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து  2-ம் கட்ட மானியம் பெற, ராம்குமார், தொழில் மைய பொது மேலாளரான சென்னையை சேர்ந்த ரமேஷ் மற்றும் உதவி செயற்பொறியாளரான சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த மனோஜ்தரன் ஆகியோரை அணுகியுள்ளார். இரண்டாம் தவணை மானியம் வழங்குவதற்காக ராம்குமாரிடம் 35,000 ரூபாயை மீண்டும் லஞ்சம் கேட்டுள்ளனர். ஏற்கெனவே முதல் கட்டம் மானியம் பெற 30 ஆயிரம் லஞ்சம் வழங்கியதாக தெரிவித்தபோதும், அவர்கள் இந்த மானியத்துக்கும் தங்களுக்கு லஞ்சம் வழங்க வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  25,000 ரூபாய் லஞ்சம் வழங்கினால் மானிய தொகையை வழங்குவதாக இறுதியாக தெரிவித்துள்ளனர்.

இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராம்குமார் இதுகுறித்து தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களின் ஆலோசனைப்படி, ரசாயண பொடி தடவிய, 25,000 ரூபாயுடன், நேற்று ராம்குமார், தருமபுரி மாவட்ட தொழில்மையத்துக்கு சென்றுள்ளார். அங்கு ராம்குமாரிடம் இருந்து பணத்தை பெறும்போது, மறைந்திருந்த, தருமபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுப்பிரமணி மற்றும் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி.,கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில், மானியம் வழங்க பொதுமேலாளர் ரமேஷ், உதவிபொறியாளர் மனோஜ்குமார் லஞ்சம் பெற்றது உறுதியானதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் இதேபோன்று மானியம் வழங்க எத்தனை பேரிடம் லஞ்சம் வாங்கினார்கள்..? இதற்கு துணை சென்ற தொழில் மைய அதிகாரிகள் யார், யார்..? என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து செய்து வருகின்றனர்.

தகவல்கள்: சே.விவேகானந்தன், செய்தியாளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com