விதிமீறலை சரிசெய்ய ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்ட நர்ஸிங் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை

விதிமீறலை சரிசெய்ய ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்ட நர்ஸிங் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை
விதிமீறலை சரிசெய்ய ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்ட நர்ஸிங் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை

நர்சிங் கல்லுாரி விதிமீறலை சரிசெய்ய 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், மத்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைத்துறை இயக்குனருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைகள் துறை இயக்குனராக இருந்த பரமசிவன் என்பவர் நாடு முழுவதுமுள்ள பல நர்சிங் கல்லுாரி நிறுவனங்களுக்கு, தணிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லுாரியின் விதிமீறலை சரிசெய்ய 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தனியார் மருத்துவமனை நிர்வாக அலுவலர் ஹரிஹரன் சிபிஐ காவல்துறையில் புகார் அளித்தார். அதன்படி, 2014ஆம் ஆண்டு முதல் தவணையான 5 லட்சம் ரூபாயை பரமசிவனின் உறவினர் சிவராம் திலகரிடம் வழங்கும்போது சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பரமசிவன், அவரது உறவினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவராம் திலகர், தணிக்கை ஆய்வாளர் துஷார் ரஞ்சன் சாமுவேல் ஆகியோர் மீது கூட்டுசதி, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, கைது செய்தது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், குற்றச்சாட்டுக்கு ஆளான பரமசிவனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிவராம் திலகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான தணிக்கை ஆய்வாளர் துஷார் ரஞ்சன் சாமுவேலை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com