நிலுவை அபராதத் தொகைகளை ஆன்லைனில் வசூலிக்க சென்னை காவல்துறையின் அசத்தல் `செக்’!

நிலுவை அபராதத் தொகைகளை ஆன்லைனில் வசூலிக்க சென்னை காவல்துறையின் அசத்தல் `செக்’!

நிலுவை அபராதத் தொகைகளை ஆன்லைனில் வசூலிக்க சென்னை காவல்துறையின் அசத்தல் `செக்’!
Published on

5 லட்சம் போக்குவரத்து இ-செலான்கள் அபராத தொகை செலுத்தாமல் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அபராதத் தொகை செலுத்தாதவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் கால்செண்டர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் இ-செலான் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் ஏ.என்.பி.ஆர் கேமரா மூலமும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் கொரோனாவுக்கு முன்புவரை சென்னையில் சுமார் 91.7 சதவீதம் வாகன ஓட்டிகள் முறையாக அபராத தொகையை செலுத்தி வந்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா தளர்வுகளுக்கு பிறகு அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் முறையாக அபராதம் செலுத்தாமல் இருப்பதாகவும், குறிப்பாக இ-செலான் மூலம் அபராதம் விதிக்கப்படுவது தொடர்பான விஷயங்கள் கூட வாகன ஓட்டிகள் சிலருக்கு தெரியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அபராத தொகை கட்டும்படி தெரிவித்து கூட மெசேஜ் அனுப்பப்பட்டாலும் அதனை கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே அபராதம் செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு அதனை முறையாக தெரிவிக்கும் வகையிலான "போக்குவரத்து கால்சென்டர்" என்ற ஒன்றை சென்னை போக்குவரத்து காவல்துறை தொடங்கி உள்ளது. அதில் முதற்கட்டமாக இன்றைய தினம் வேப்பேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து கால்சென்டரை திறந்துவைத்தார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால். தொடர்ந்து அதன் முக்கியத்துவத்தையும் அவர் விவரித்து கூறினார்.

அவர் கூறிய தகவலின்படி, இந்த கால்சென்டர் குறித்து நமக்கு தெரியவரும் விவரங்கள்: சென்னையில் 10 காவல் நிலையங்களில் இந்த கால் சென்டர் மையம் செயல்பட தொடங்கி உள்ளது. போக்குவரத்து உதவி ஆணையர் தலைமையில் அவையாவும் செயல்பட தொடங்கி உள்ளது. இந்த சென்டர் மூலம் வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணில் அவர்களை அழைத்து நிலுவையில் உள்ள இ-செலான்களை பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் வாகன ஓட்டிகளுக்கு நிலுவையில் உள்ள இ-செலான்களை மொத்தமாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்; போலவே நிலுவையில் உள்ள இ-செலான்கள் - அபராதத் தொகைகள் போன்றவற்றை தொலைபேசியிலும், நேரிலும் பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்கும் பணியை "போக்குவரத்து கால் சென்டர்" மேற்கொள்ளும்.

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகள் மீறியதாக ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு செலான்கள் போக்குவரத்து போலீசாரால் அனுப்பப்படுவதாகவும், குறிப்பாக அண்ணாநகரில் ஒரு குறிப்பிட்ட ஜங்ஷனில் மட்டும் 7ஆயிரம் செலான்கள் தினமும் போடப்படுவதாகவும் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதனால் புதியதாக 12 இடங்களில் 14 ஏ.என்பி.ஆர் கேமராக்கள் பொருத்தியுள்ளதாகவும், இதனால் பல மடங்கு உயர்ந்து ஒரு நாளைக்கு 1லட்சம் அபராத செலான்கள் வரை போட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், “இன்றுமுதல் போக்குவரத்து கால் சென்டரில் பணியில் இருக்கும் காவல் உதவி ஆய்வாளர் அபராத தொகை செலுத்தாமல் உள்ள வாகன ஓட்டிகள் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அபராதத்தை செலுத்தும் படி கேட்டு வருகின்றனர். ஆனால் சிலர் இணைப்பை துண்டித்து விடுவது, முறையாக பதில் அளிக்காமல் செயல்படுவது போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. 5 தடவைக்கு மேல் அபராம் விதித்தும் கூட செலுத்தாமல் ஏமாற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது போக்குவரத்து காவல்துறை. இ-செலான்களை நீதிமன்றத்திடம் ஒப்படைத்து வாரண்டு பெற நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஒரு நாளைக்கு 10 ஆயிரம் செலான்கள் போடப்படுகிறது. அதில் 2ஆயிரம் செலான்களுக்கான அபராத தொகை மட்டுமே கட்டப்படுகிறது. தற்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அபராத செலான்கள் நிலுவையில் இருக்கிறது. வாகன ஓட்டிகள் அபராத தொகை நிலுவையில் உள்ள இ-சலான்களின் விவரங்களைச் சரிபார்த்து, அபராதத் தொகையை Online Payment, Paytm App, Post Office, Tamil Nadu E-Sevai Centers, Court ஆகிய முறைகளில் செலுத்தலாம்” என்றார்.

நிலுவையில் உள்ள இ-செலான்களைச் சரிபார்த்து, அபராதத் தொகையை ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com