யார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது
சென்னையில் 'ரூட் தல' யார் என்ற போட்டியில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திலிருந்து பிராட்வே நோக்கி அரசு பஸ் தடம் எண்.592 சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் பயணித்தனர். வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென்று மோதிக்கொண்டனர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
உடனடியாக அங்கிருந்த மாணவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த எம்கேபி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து பேருந்தில் தகராறில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியை சேர்ந்த மாணவர்களும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் பயணித்து வந்தது தெரியவந்தது. மேலும் சினிமா பாணியில் இரு கல்லூரி மாணவர்களிடையே யாரு ’ரூட்டு தல’ என எழுந்த சண்டையில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதும் தெரியவந்தது.
உடனடியாக அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போலீசார் அம்பேத்கர் கல்லூரியை சேர்ந்த சதீஷ், விக்னேஷ், தினேஷ், அயூப் மற்றும் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த விக்னேஷ், பிரகாஷ், ஜெயராம் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.