இறுதிச்சடங்கு முடிந்த பின் உயிரோடு வந்தார் மகள்: பெற்றோர் மகிழ்ச்சி, போலீஸ் அதிர்ச்சி!

இறுதிச்சடங்கு முடிந்த பின் உயிரோடு வந்தார் மகள்: பெற்றோர் மகிழ்ச்சி, போலீஸ் அதிர்ச்சி!
இறுதிச்சடங்கு முடிந்த பின் உயிரோடு வந்தார் மகள்: பெற்றோர் மகிழ்ச்சி, போலீஸ் அதிர்ச்சி!

சினிமாவை மிஞ்சும் வகையில்தான் இருக்கிறது! பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த சூப்பர் திரைக்கதை போல நடந்திருக்கிறது இந்தச் சம்பவம்.

இறந்துபோன மகளின் உடலுக்கு இறுதிச் சடங்கு முடிந்து, சோகத்தில் இருக்கும்போது, அந்த மகள் உயிரோடு வந்தால்? ஆச்சரியம்தான். இந்தச் சம்பவம் அந்த ஆச்சரியத்தை இன்னும் அதிகமாக்குகிறது. 

நொய்டாவில் உள்ள ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ் சக்சேனா. மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் மகள் நீது. இவருக்கும் ராம் லக்‌ஷமண் என்பவருக்கும் கடந்த 6 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். நீது, ஷாஜகான்பூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென மாயமானார், நீது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீஸில் புகார் செய்தார், நீதுவின் அப்பா சக்சேனா.

இதற்கிடையே ஏப்ரல் 24-ம் தேதி அடையாளம் தெரியாத பெண் உடல் ஒன்று எரிந்த நிலையில், சோர்ஹா கிராமத்தில் கிடந்தது. அதைப் பார்த்த சக்சேனாவும் அவர் மனைவியும் அது தங்களது மகள் உடல்தான் என்று முடிவு செய்தனர். முகம் முழுவதுமாகச் சிதைந்திருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், தாலியை வைத்து இது நீதுதான் என்றும் அவளது கணவர்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து போலீசார் உடலை அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் இறுதி சடங்கை நடத்தி முடித்தனர். 

இதற்கிடையே போலீசார் நீதுவின் கணவரையும் மாமனாரையும் பிடித்து தொடர்ந்து விசாரித்தனர். அவர்கள் இந்தக் கொலையில் ஈடுபடவில்லை என தெரிந்தது. பின்னர் உங்கள் மளிகைக்கடைக்கு அடிக்கடி வருபவர்கள் யார்? நீது காணாமல் போனபின் வராமல் இருப்பவர்கள் யார், யார் என்று கவனியுங்கள் என்று போலீசார் சக்சேனாவிடம் கூறினர். 

அதன்படி அவர்கள் கவனித்ததில் பக்கத்தில் வசிக்கும் பூரன் என்பவர், சமீப காலமாக கடைக்கு வருவதை குறைத்துக்கொண்டது தெரிய வந்தது. தினமும் சிகரெட் வாங்க பலமுறை கடைக்கு வரும் அவரை இப்போது காணவில்லை. ஒரு நாள் அவர் வந்ததும் நீதுவின் பெற்றோர் விசாரித்தனர். ’உங்க மகள் பற்றி எனக்குத் தெரியாது’ என்று கூறிவிட்டு சென்றார். இப்படி சொன்ன மறுநாள், டிராவல் பேக் சகிதம் அவர் செல்வதைப் பார்த்த சக்சேனா, போலீசுக்கு தகவல் சொன்னார். 

போலீசார் விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார் அவர். ’நாங்க ரெண்டு பேரு எடா பகுதியில் ஒன்றாக வாழ்கிறோம்’ என்றார். கொலை செய்திருப்பார் என்று பார்த்தால், இப்படியொரு திருப்பமா? என்று போலீசார் யோசித்துக்கொண்டிருக்க, அதற்குள் கடந்த புதன்கிழமை திடீரென அப்பா-அம்மாவைத் தேடி வீட்டுக்கு வந்துவிட்டார் நீது. இதையடுத்து போலீசார் நீதுவிடம் விசாரித்தனர்.

‘எங்கப்பா ரொம்ப திட்டிட்டே இருந்தார். அதனால, பூரனோட சேர்ந்து வாழலாம்னு போயிட்டேன். அவ்வளவுதான்’ என்றார் கூலாக. மகள் திரும்ப வந்ததில் சர்வேஷ் சக்சேனாவுக்கு மகிழ்ச்சி. அப்படியென்றால் இறுதிச் சடங்கு செய்யப்பட்ட அந்த உடல் யாருடையது? 

போலீஸுக்கு இப்போது ஆரம்பித்திருக்கிறது தலைவலி !

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com