நொய்டாவில் கொடூரம் | வரதட்சணைக்கு பலியான மற்றொரு பெண்.. கொலை செய்த கணவரை சுட்டுப்பிடித்த போலீசார்!
செய்தியாளர் : ஸ்ரீதர்
மகன் கண்முன்னே மாமியாரும் கணவனும் சேர்ந்து தாயை கொடூரமாக உயிரோடு எரித்துக் கொன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி காண்போரை கதி கலங்கச் செய்கிறது. என்ன நடந்தது ? இப்படிப்பட்ட கொடூரத்திற்கான காரணம் என்ன ? விரிவாகப் பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா மாவட்டத்தில் உள்ள சிர்சா எனும் கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் விபின். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு நிக்கி என்னும் பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அதே குடும்பத்தில் ஏற்கனவே நிக்கியின் சகோதரி காஞ்சன் என்பவரும் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் இருந்துள்ளனர்.
நிக்கியின் திருமணத்தின்போது அவரது வீட்டார் தரப்பில் இருந்து விபினுக்கு நகையும் பணமும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனலும் திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு வினின் குடும்பத்தினர் நிக்கியை துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.
அடிக்கடி நிக்கியை வார்த்தைகளால் துன்புறுத்தியதோடு கணவனும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தக் கொடூரத்தின் உச்சமாகத்தான் கடந்த வியாழனன்று மீண்டும் நிக்கியை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அத்தோடு நில்லாமல் அவரது மாமியாரும் கணவரும் சேர்ந்தே நிக்கி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். சோகம் என்னவென்றால் இதெல்லாம் அவரது 6 வயது மகன் கண்முன்னாலேயே நடந்துள்ளது.
பாடுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தீக்காயங்களால் நிக்கி உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் சகோதரியின் புகாரின் பேரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கசானா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிக்கியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். அத்துடன், தலைமறைவாக உள்ள மாமியார், மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோரை கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நிக்கியின் குடும்பத்தினர் “36 லட்சம் ரூபாயை வரதட்சணையாக கேட்டு நிக்கியை , கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், “சகோதரிகளில் ஒருவருக்கு தான் வரதட்சணை கிடைத்துள்ளது. மற்றொருவருக்கு கிடைக்கவில்லை. உங்களில் யாரேனும் ஒருவர் இறந்து விடுங்கள், அப்போது தான் மற்றொரு திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறி மீண்டும் மீண்டும் அடித்தனர். மகனின் கண் முன்பே நிக்கியின் மீது ஏதோ ஒரு எரிபொருளை ஊற்றி கணவரின் குடும்பத்தினர் எரித்தனர். நான் முயன்றும் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
ஒருகட்டத்திற்கு மேல் நான் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் தான் நிக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது கூட எனக்கு தெரியவில்லை” என காவல்நிலைய புகாரில் நிக்கியின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தர வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்
இதுதொடர்பான வீடியோவில், “விபின் மற்றும் அவரது தாயார் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கி அவரது முடியை பிடித்து இழுத்துச் சென்று அவர்மீது எரிபொருளாஇ ஊற்றி தீ பற்ற வைத்துள்ளனர். விபின் சட்டை அணியாத நிலையில் அவரது வயிறு மற்றும் பின்பக்கத்தில் ரத்தக்கறை இருந்துள்ளது பதிவாகியிருந்துள்ளது.
உடலில் தீப்பற்றி எரியும் நிலையிலேயே நிக்கி படிகட்டுகளில் இருந்து இறங்கி வந்துள்ளார். தீக்காயங்களுடன் நிக்கி வலியில் போராடியபடி தரையில் அமர்ந்திருந்த” காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது.