நீலகிரி: பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை விற்ற கொடுமை - பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்கு
பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை விற்ற சம்பவத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல், கஸ்தூரிபாய் காலணியைச் சேர்ந்தவர்கள் ராபின் (25)- மோனிஷா (20) தம்பதி. இந்த தம்பதிக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுமார் இரண்டு வயதுள்ள பெண் குழந்தையை, பிறந்த மூன்று மாதத்திலேயே உதகை மேரிஸ்ஹில் பகுதியைச் சேர்ந்த பாரூக் என்பவருக்கு ராபின் மற்றும் மோனிஷா ஆகியோர் விற்றதாக கூறப்படுகிறது.
மேலும் தனது 4மாத ஆண் குழந்தையை சேலம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவரிடம் விற்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே 3 வயது பெண் குழந்தை மோனிஷாவின் அக்கா பிரவினாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். அப்போது ராபின் பிரவினாவிடம் சென்று தனது பெண் குழந்தையை கேட்டுள்ளார்.
அவர் தர மறுத்ததையடுத்து மது போதையில் ராபின் பணம் இல்லாததால் பணத்திற்காக எனது பிள்ளைகளை விற்றது போல், இந்த பிள்ளையையும் பெங்களூரில் உள்ள ஒருவருக்கு விற்க போவதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தைகளின் தாய் மோனிஷா, தந்தை ராபின், இடை தரகர் கமல், வாங்கியவர்கள் பாரூக், உமா மகேஷ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.