கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020-ம் ஆண்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020-ம் ஆண்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020-ம் ஆண்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு
Published on

கொரோனா பொதுமுடக்க காலமான 2020-ம் ஆண்டில், கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, கடந்த 2020-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த குற்றங்களை 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அது 28% அதிகரித்துள்ளது நமக்கு தெரியவருகிறது. அதாவது 2019ம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில், 386 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020ல் இந்த எண்ணிக்கை 488 என அதிகரித்துள்ளது.

2020-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 66,46,285. இதில் இந்திய தண்டனை சட்டப்பிரிவான ஐ.பி.சி.யின் கீழ் 42,54,356 குற்றங்களும், மாநில குற்ற தடுப்பு சட்டத்தின்  கீழ் 23,46,929 குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் (2020ம் ஆண்டில்) மாநில சட்டங்களின் கீழ் பதிவான குற்றங்களின் சதவிகிதம், 31.9 என்றிருக்கிறது. இந்த சதவிகிதம், அதற்கு முந்தைய ஆண்டான 2019ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 21.6 சதவிகிதத்தைவிடவும் குறைவு.   

கடந்த 2020ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,17,503 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுடன் இதை ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8.3% குறைந்துள்ளது. 2019ம் ஆண்டில் ஒரு லட்சம் பெண்களில் 62.3 ஆக குற்ற விகிதம் இருந்த நிலையில் 2020ம் ஆண்டு 56.5 ஆக குறைந்துள்ளது. இதில் 30% வழக்குகள் கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமைபடுத்தப்பட்டதாகவும், 23% வழக்குகள் பெண்களை தாக்கியாதவும்,  16.8% வழக்குகள் பெண்களை கடத்தியதாகவும், 7.5% வழக்குகள் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை வழக்குகளை பொறுத்தவரை, அது 2019ம் ஆண்டைவிடவும் 2020-ல், 1% அதிகரித்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டு 28,915 கொலை வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2020ம் ஆண்டு  29,193 கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 10,404 வழக்குகள் பழிவாங்கும் நோக்கிலும், 4,034 தனிப்பட்ட விரோதம் காரணமாகவும், 1,876 வழக்குகள் ஆதாயத்திற்காகவும் செய்யப்பட்ட கொலை குற்றங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை ஆறுதல் அளிக்கும் வகையில் 13.2% அது குறைந்துள்ளது. 2020ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ் 1,28,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2019ம் ஆண்டு 1,48,090 வழக்குகள் தான் பதியப்பட்டிருந்தது. இதில் 42.6% குழந்தை கடத்தல், 38.8% வழக்குகள் பாலியல் மற்றும் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது.

அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களை பொறுத்தவரை 2019ம் ஆண்டு 45,961 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில் 9.4% அதிகரித்து 2020ம் ஆண்டில் 50,291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் எதிரான குற்றச்செயல்களுக்காக 2020ம் ஆண்டு 8,272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 7,570 ஆக இருந்தது. அதாவது 2020ம் ஆண்டு இது 9.3% அதிகரித்து உள்ளது. 

கொரோனா காலத்தில் இணையவழி குற்றங்களான சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 11.8% குற்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் 2020ம் ஆண்டு 50,035 வழக்குகள் சைபர் குற்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 60.2% வழக்குகள் மோசடி வழக்குகளாகவும், 3,293 வழக்குகள் ஆன்லைனில் பாலியல் சீண்டல் வழக்குகளாகவும், 2,440 வழக்குகள் மிரட்டி பணம் பறித்தலின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com