நத்தம்: அண்ணனால் தம்பி மனைவி, குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் - போலீசார் விசாரணை
நத்தம் அருகே ஆசைக்கு இணங்காத தம்பியின் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து தீவைத்து எரித்த அண்ணனை நத்தம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலையூர் அடுத்த வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சை. இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. திருமணமான சிவகுமாருக்கு அஞ்சலை (21), என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அஞ்சலை 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சிவகுமார் வியாபாரத்திற்கு சென்ற நிலையில், அஞ்சலை அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு விறகு வெட்டச் சென்ற கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இதற்கு அஞ்சலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அஞ்சலையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கருப்பையா அஞ்சலையின் பெண் குழந்தையையும் கொலை செய்து தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
தோட்டத்து பகுதியிலிருந்து புகை வருவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர். இதில், கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

