நாமக்கல்: நிலத்தகராறில் தம்பியை அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்
நாமக்கல் அருகே நிலத்தகராறு தொடர்பாக தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்துள்ள கல்யாணியை சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கும் இவரது சகோதரர் அண்ணாதுரைக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக நிலப் பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அண்ணாதுரையின் குடும்பத்தினர் நேற்று இரவு கோயிலுக்கு சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்து அங்கு வந்த பழனிவேல் உள்ளிட்ட சிலர் அண்ணாதுரையை அடித்துக்கொலை செய்துவிட்டு, தன்னை தம்பி அடித்து விட்டதாக உறவினர்களுக்கு போன் செய்ததோடு நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
இதனையடுத்து அண்ணாதுரையின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அண்ணாதுரை வீட்டிற்கு அருகே உள்ள வயலில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுசத்திரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பழனிவேல் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.