நாமக்கல் | சித்த மருத்துவரை கடத்தி நகை, பணம் கொள்ளை - 7 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்
செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம் (33). இவர், கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சிவராத்திரி அன்று நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலுக்கு பேருந்தில் வந்துள்ளார். இதையடுத்து மோகனூர் சாலையில் உள்ள கோயிலுக்குச் செல்ல இருசக்கர வாகனத்தில் லிஃட் கேட்டு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர்கள் கோயிலுக்குச் செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த மேலும் சில நபர்களுடன் சித்த மருத்துவரை மிரட்டி அவர் அணிந்திருந்த 2.5 சவரன் தங்க நகையை பறித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது செல்போன் செயலில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை வேறு ஒரு கணக்கிற்கு மற்றிக் கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கெண்டனர் இதையடுத்து சஞ்சய் (22), கார்த்திகேயன் (21), அருண் (21), சஞ்சய் (19), அருண்குமார் (24), புருஷோத்தமன் (24), கார்த்திகேயன் (22) ஆகிய 7 பேரை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திட மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டதின் பேரில் சிறையில் உள்ள 7 பேரும் குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.