’எங்கூட பேச மாட்டியா?’ அப்போலோ நர்ஸ் மீது ஆசிட் வீச்சு, முன்னாள் காதலன் வெறிச்செயல்!
தன்னிடம் பேசாத அப்போலோ நர்ஸ் மீது ஆசிட் வீசிய அவரது முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜிஷா ஷாஜி. வயது 23. இவர் இப்போது ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். கேரளாவில் பணியாற்றிய இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன் தான் ஐதராபாத் வந்துள்ளார்.
இவரது சொந்த ஊரைச் சேர்ந்தவர் பிரமோத். ஜிஷா வீட்டின் அருகில் வசிக்கிறார். இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அன்பை பரிமாறிக் கொண்ட இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரமோத்துடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார் ஜிஷா. இதனால் வருத்தமடைந்த அவர், தொடர்ந்து போனில் பேச முற்பட்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெறுத்துப் போன அவர், நேராக ஐதராபாத் வந்தார். ஜிஷா எப்போது மருத்துவமனை செல்கிறார், அவர் வேலை நேரம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டார். இதையடுத்து நேற்று மாலை அவர் ஷிப்ட் முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது மறித்தார் பிரமோத்.
’என்னை ஏன் பார்க்க வந்தே?’ என்று ஷிஜா கேட்டார். ‘நீ ஏன் எங்கிட்ட பேசமாட்டேங்கிற?’ என்றார் பிரமோத். பதில் சொல்லாமல் சென்றார் ஜிஷா. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ’என் மூஞ்சியில முழிக்காத’ என்று கூறிவிட்டு ஜிஷா நடந்தாராம். இதனால் கடுப்பான பிரமோத், தனது பேக்கில் மறைத்து பாட்டிலில் வைத்திருந்த ஆசிட்டை அவர் மீது ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதை எதிர்பார்க்காத ஜிஷா, வலியால் கதறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு ஜிஷாவை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ’ஜிஷாவுக்கு பயப்படும்படி ஏதும் இல்லை. அவருக்கு 10 சதவிகித காயம் ஏற்பட்டுள்ளது’ என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
போலீசார், அந்த முன்னாள் காதலனைத் தேடி வருகின்றனர்.